திருமண நிகழ்ச்சிகள், விழாக்களில் தற்போது டி.ஜே. சத்தத்துடன் நடனமாடுவது புதிய கலாச்சாரமாக மாறிவிட்டது. இதே போன்ற அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பி நடனம் ஆடும் போது திடீரென சிலர் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதேபோல நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுபவர்கள் திடீர் திடீரென இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டி.ஜே. சத்தத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம், டி.ஜே. ஒலிகளின் விளைவுகள் குறித்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 15,000 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தியது. ஒலிபெருக்கிகள் மற்றும் டி.ஜே. ஒலிகள் போன்ற எந்தவொரு இசையும் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், இதயத் துடிப்பு மாறுவது கண்டறியப்பட்டது. மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. டி.ஜே.க்கள் போன்ற உரத்த ஒலிகளால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வியத்தகு அளவில் அதிகரிக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் இறக்கும் அபாயம் உள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். 100 டெசிபலுக்கு மேல் ஒலிகளை நீண்ட நேரம்கேட்டால் காது கேட்கும் பிரச்சனைகள் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது. டி.ஜே. சத்தங்கள் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஒலி மாசுபாட்டால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
நமக்கு இதயத் துடிப்பு ஏற்படுவது போல, கருப்பையில் உள்ள குழந்தைகளும் அவற்றை அனுபவிக்கலாம். கர்ப்பத்தின் 4-வது மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் சத்தங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாய்கள், கால்நடைகள், ஆடுகள் மற்றும் கோழிகள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்கின்றன.
சமீபத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தெலுங்கானா மாநிலம் மொய்னாபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் டிஜே சத்தம் காரணமா அருகிலுள்ள கோழிப் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததாக புகார் வந்தது. பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. அதிர்வு விளைவு காரணமாக கட்டிடங்களும் அதிர்வுறும். இதன் விளைவாக, பலவீனமான கட்டமைப்புகள் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது. டி.ஜே. பயன்படுத்தும் இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஹெட்போன் அல்லது நுரையால் ஆனவற்றை பயன்படுத்தலாம். அவை உரத்த ஒலிகளைத் தடுக்கின்றன. அவை 30 டெசிபல் சத்தத்தைக் குறைக்கின்றன. காது செருகிகளை பயன்படுத்தி முழு காதையும் மறைக்காத ஹெட்போன் சந்தையில் வந்துள்ளன. அவை சத்தத்தை முழுமையாகத் தடுக்காமல் தெளிவான ஒலியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டி.ஜே. ஒலிபரப்பும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.