சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திண்டமங்கலத்தானூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், கருப்பட்டி வியாபாரி. இவரது மூத்த மகன் பிரகாஷ் (37), இவர் தந்தையின் கருப்பட்டி வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறார். பிரகாசுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்த்து அப்போது வந்தனர். ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு தெரிந்த புரோக்கர் ஒருவர் இருப்பதாக கூறினார். தொடர்ந்து சங்ககிரி வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த மணி என்பவரை அர்ஜுனனுக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் பெண் இருப்பதாக கூறி அர்ஜுனன் மற்றும் அவரது மகன் பிரகாசை திண்டல் முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த பெண் புரோக்கரான வள்ளி என்பவர் பிரியதர்ஷினி (27) என்ற பெண்ணை காட்டி இவர் தான் மணப்பெண் என்று கூறினார்.மேலும் அவர்களுடன் இருந்த செல்வி என்ற பெண்ணை தாய் என்றும், பிரியா என்பவரை சகோதரி என்றும் அறிமுகப்படுத்தி உள்ளார். தொடர்ந்து ஜலகண்டாபு கரத்திற்கு வந்து பிரகாஷ் வீட்டையும் அவர்கள் பார்த்து சென்றனர். மறுநாளான கடந்த மாதம் 27-ந் தேதி ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி சித்தேஸ்வரர் கோவிலில் பிரகாஷ்ட பிரியதர்ஷிணி திருமணம் நடந்தது.
உடனே திருமணத்திற்காக பேசப்பட்ட புரோக்கர் கமிஷனான ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மணி மற்றும் குமார் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் திருமணம் முடிந்ததில் இருந்து பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பிரியதர்ஷினி சரிவர பேசாமலும் வீட்டை விட்டு வெளியில் வராமலும் பயத்தில் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது பிரியதர்ஷினி சேலம் குகை பகுதியை சேர்ந்த தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையில் தற்போது 2-வதாக கட்டாயப்படுத்தி புரோக்கர்கள் தனக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் புரோக்கர் மணியை தொடர்பு கொண்டு பேசிய போது சரியாக பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசி உள்ளார். ஏற்கனவே திருமணமான பெண்ணை ‘பொய் சொல்லி ஏமாற்றி தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாக அர்ஜுனன் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணமான பெண்ணை மீண்டும் பிரகாசுக்கு திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது. இதற்கு மணப்பெண்ணும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் புரோக்கர் மணி அவரது நண்பர்களான குமார், சக்திவேல், பெண் புரோக்கர் வள்ளி, தாயாக நடித்த செல்வி, சகோதரியாக நடித்த பிரியா, மணப்பெண் பிரியதர்ஷினி ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் செல்வி, பிரியா, திருமணம் செய்து மோசடி செய்த இளம்பெண் பிரியதர்ஷினி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான புரோக்கர் மணி அவரது நண்பர்களான குமார், புரோக்கர் வள்ளி ஆகிய 4 பேரையும் சக்திவேல், பெண் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கினால் தான் மேலும் இது போல திருமணமான பெண்களை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்தார்களா? என்பது தெரிய வரும் என்பதால் அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். திருமணமான பெண்ணை பணத்துக்காக மீண்டும் ஒரு வாலிபருக்கு ஏமாற்றி திருமணம் செய்து வைத்த இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.