Offline
Menu
புதுக்கோட்டையில் பல்லவராயர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
By Administrator
Published on 09/06/2025 09:00
News

சென்னை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்லவராயர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலுப்பூர் வட்டம், மாராயப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, அங்குள்ள கண்டனி குளம் அருகிலுள்ள வயல்வெளியில் கற்பலகை ஒன்று காணப்பட்டதாகவும் அதில் பழங்கால எழுத்துக்கள் இருப்பதாகவும் தகவல் அளித்தார்.

அந்த தகவலின் பேரில், பேராசிரியர் முத்தழகன், பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோரைக் கொண்ட குழு அங்கு சென்று ஆய்வு செய்தது. ஆய்வில், அந்த கற்பலகை பல்லவராயர் காலத்துக்குரியது என்பது உறுதிசெய்யப்பட்டது.

பேராசிரியர் முத்தழகன் கூறுகையில்:

“மாராயப்பட்டி கண்டனி வயல்வெளி நடுவே உள்ள காலமுனி கோயிலின் எல்லைக்குக் கிழே, வணங்கப்பட்டு வரும் கல் தூணுக்கு எதிரே இந்தக் கற்பலகை ஊன்றப்பட்டிருந்தது. மூன்று அடி உயரமும், இரண்டு கால் அடி அகலமும் கொண்ட இப்பலகையில், ஆனந்த வருடம் ஆவணி 6ஆம் நாளில் ஆரியூர் அழகிய சோகநாத சுவாமிக்கு, சிவந்தெழுந்த பல்லவராயர் கண்டனி வயல்வெளி நிலங்களை மானியமாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலதானத்துக்கு தீங்கு விளைவிப்பவர்கள் ‘சிவதுரோகிகள்’ எனக் கருதப்படுவர் எனவும் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சிவந்தெழுந்த பல்லவராயர், கி.பி. 17ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாற்றின் வடக்கு பகுதியை ஆட்சி செய்த பல்லவராயர் மரபின் கடைசி அரசர் என வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

Comments