கோலாலம்பூர்:
மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியால் (MMEA), ஒரு சமூக ஊடகப் பிரபலம் கைது செய்யப்பட்டார். கோலா திரெங்கானு, புலாவ் பிடோங் அருகே, நீரில் மிதக்கும் ஒரு மேடையில், ஆடம்பரக் காரை வைத்து, அவர் படப்பிடிப்பு நடத்தியதால், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்தச் செயல், பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தியதுடன், 1952-ஆம் ஆண்டு வணிக கப்பல் சட்டத்தையும் (Merchant Shipping Ordinance 1952) மீறியதாக அதிகாரிகள் கூறினர்.
ஓப் இமான் (Operation Iman) என்றழைக்கப்படும் இந்த நடவடிக்கையின்போது, இரண்டாவது படகு, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் இயங்கியதால், அதுவும் கைப்பற்றப்பட்டது. படப்பிடிப்பில் ஈடுபட்ட பிரபலம், படகு ஊழியர்கள், பயணிகள் உட்பட, 21 முதல் 32 வயதுக்குட்பட்ட 12 பேரும், திரெங்கானு மாநில படகு துறைக்கு மேலதிக விசாரணைக்காக, அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே, மக்களின், ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தாலும், பாதுகாப்பு மற்றும் கடல்சார் சட்டங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று, அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.