கோலாலம்பூர்:
மலேசியாவில் விற்கப்படாத வீடுகள் , 100,000-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் தவறானவை என்று, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு (KPKT) விளக்கமளித்துள்ளது.
தேசிய சொத்துத் தகவல் மையத்தின் (NAPIC) தகவலின் படி, விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து குறைந்து வருகிறது.
2025-ஆம் ஆண்டில், 23,515 வீடுகள் மட்டுமே விற்கப்படாமல் உள்ளன.
அரசின் தொடர் முயற்சிகள், விநியோகம் மற்றும் தேவைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி, வீட்டுச் சந்தையை நிலையாக வைத்திருப்பதாக, வீடமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, துல்லியமான தகவல்களைப் பெற, வீடமைப்பின் ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு (HIMS) மூலம், ஒரு நாட்டிற்கு ஒரு தரவு (One Data for One Country) என்ற திட்டத்தின் கீழ், தேசிய சொத்துத் தகவல் மையத்துடன், வீடமைப்பு அமைச்சு ஒத்துழைத்து வருகிறது.
2026-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்காக, 13 திட்டங்களை, வீடமைப்பு அமைச்சு முன்வைத்துள்ளது. இதில், மடாணி வீட்டு உரிமை இயக்கம் (Madani Home Ownership Campaign – HOC 3.0) என்ற திட்டமும் அடங்கும்.
இது, முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, குறைந்த விலையில் வீடுகளை வாங்க ஊக்கத்தொகை அளிக்கப்படும். இதன் மூலம், வீடமைப்புத் துறையை, பொருளாதாரத்தின் ஒரு முக்கியத் தூணாக வலுப்படுத்த முடியும்.