சிரம்பான்:
போர்ட்டிக்சன் தஞ்சோங் அகாஸில் லிங்கி ஆற்றில் கார் விழுந்ததில் இரண்டு சிறார்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை மற்றும் அவரது காதலி ஆகியோர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறார்களின் தந்தை என நம்பப்படும் 46 வயது உள்ளூர் நபர் மற்றும் 41 வயது பெண்ணுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்ற உதவி பதிவாளர் நூருல் ஃபர்ஹா சுலைமான் இன்று பிறப்பித்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் தெரிவித்தார்.
இந்த தடுப்புக் காவல், தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் (கொலைக்கான விசாரணை) மேலதிக விசாரணைக்காக பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“சம்பவத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். எனினும், நேற்றிரவு 8.00 மணிக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதுவரை பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களையே அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று காலை 11.45 மணியளவில் நிசான் கார் ஒன்று தஞ்சோங் அகாஸில் லிங்கி ஆற்றில் விழுந்தது. காரில் சிக்கியிருந்த ஆறு மற்றும் எட்டு வயது சிறுவன், சிறுமி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் ஷா ஆலம் முகவரியுடையவர்கள் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.