கோலாலம்பூர்:
சிலாங்கூர், ஷா ஆலம் பகுதியில், ஜேபிஜே (JPJ) அதிகாரிகள் நடத்திய, ‘ஓப் கெம்பூர் கெண்டெரான் பெர்டாகாங்கான்’ (Ops Gempur Kenderaan Perdagangan) என்றழைக்கப்படும், வணிக வாகனச் சோதனையின்போது, PSV அனுமதி அட்டை, சட்டப்பூர்வ சாலை வரி, காப்பீடு ஆகியவை இல்லாமல் பேருந்தை ஓட்டிய, 30 வயதுடைய, இலங்கை நாட்டு ஆடவர், கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சிலாங்கூர் மாநில தரை போக்குவரத்து இலாக்கா இயக்குனர் Azrin Borhan கூறுகையில், அந்த ஆடவர், கடந்த ஆறு மாதங்களாக, முதலாளியின் உத்தரவின் பேரில், ஓட்டுநராக வேலை செய்து வருவதாகக் கூறியுள்ளார் என்றும் இந்த நிலையில், அந்தப் பேருந்து, ஒரு போக்குவரத்து நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
அந்தப் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாலை வரி காலாவதியானது, காப்பீடு இல்லாதது, சட்டப்பூர்வ ஆய்வு இல்லாதது, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது உட்பட, பத்து குற்றங்களுக்காக, அவருக்குச் சமன்கள் வழங்கப்பட்டன.
இதனிடையே, விதிகளை மீறும் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்களுக்கு எதிராக, தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஜேபிஜே வலியுறுத்தியுள்ளது.