சிங்கப்பூர் மற்றும் மலேசிய ஆகாயப்படைகள் இணைந்து நடத்திய மூன்று நாள் கூட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பகல் மற்றும் இரவு நேரங்களில் தேடுதல்–மீட்பு நடவடிக்கைகளுக்கான பாவனைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் செயல்பாடுகளும் இடம்பெற்றன.
உண்மையான சூழலை ஒத்த நிலையில் திட்டமிடும் திறனை மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் தென்கடற்கரை பகுதியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடுதல் மற்றும் நீரில் தத்தளிப்போரை உடனடியாக மீட்பதில் இப்பயிற்சிகள் கவனம் செலுத்தின.
சாரெக்ஸ் மால்சிங் (Sarex Malsing) என அழைக்கப்படும் இந்த ஆண்டு தோறும் நடைபெறும் பயிற்சிகளில் சிங்கப்பூர் ஆகாயப்படை, மலேசிய ஆகாயப்படை விமானிகள், நிலத்தள அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் பங்கேற்றனர்.
இம்முறைப் பயிற்சி செம்பவாங் ஆகாயப்படைத் தளத்தில் செப்டம்பர் 3, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற்றது.