Offline
Menu
உயிர்களில் பேதமில்லை – உடல்களில் மட்டுமே பேதமிருக்கிறது; 7ஆவது உலக சைவ சமய மாநாட்டில் முனைவர் நாகப்பன் உரை
By Administrator
Published on 09/07/2025 09:00
News

உலகிலுள்ள அனைத்து உயிர்களும் ஒன்றே. நமக்குள் உயிர்களில் பேதமில்லை- உடல்களில் மட்டுமே பேதமிருக்கிறது என்று  7ஆவது உலக சைவ மாநாட்டில்  உரையாற்றிய முனைவர் நாகப்பன்  ஆறுமுகம் தெரிவித்தார்.  ஓர் அறிவு முதல் ஆறு அறிவு உள்ள மனிதர்கள் வரை  உயிர் என்பது ஒன்றுதான். இன்னும் சொல்ல போனால்  ஓர் அறிவு  கொண்ட எந்த உயிரினமும் தங்கள் சொந்த உயிரினத்தைக் கொல்வதில்லை. ஆறு அறிவுக் கொண்ட நாம் தான் அதனை செய்கிறோம்.

அதே போல் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் கடவுள் ஒருவரே என்பதுதான் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. கடவுள் உலகத்தை படைத்தார்.  நாம்தான் அதனை கூறுபோட்டு பிரித்து பகைமையை ஏற்படுத்தி வருகிறோம்.   முதலாம் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின் பொருளாதா தன்னிறைவு அடைந்த பின்னும் நெடுங்காலமாய் நீறு பூத்த போல் இருந்த மத உணர்வு உலக அமைதியின்மைக்கு இன்னொரு காரணமாக அமைந்தது.

நமது சமயத்தில் கடவுளுக்கு சொரூபம், தடத்தம் என்று நிலைகளைக் கூறுவது சைவ மெய்யினம். சைவ மெய்யியலின் இந்த முடிவை உலகின் பெரிய மதங்களான இஸ்லாம், கிருஸ்த்துவம் ஆகிய மதங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியாவின் சீக்கிய மதமும் கடவுள் ஒருவனே என்றும் அவன் உருவமற்றவன் என்பதையும் ஒப்புக் கொள்கின்றது. எதனையும் சார்ந்து இராதவன். பிறவாதவன். ஆகவே இறவாதவன். இயற்கை அறிவு உடையவன். எனவே தனக்கு மேல் ஒரு குருவைக் கொண்டவன் அல்லன்.

பொருள் என்று ஒன்று இருந்தால் அதற்குக் குணம் என்பதும் இருக்க வேண்டும். கடவுளின் குணத்தை மனிதன் எவ்வாறு அறிவான்? . கடவுள் பெருங்கருணையாளன் என்பதால் உயிர்களுக்காக உடல், உலகங்களைப் படைத்துக் கொடுத்தான். உயிர்களை உலகத்தில் வைத்து இன்ப துன்பங்களை ஊட்டி ஆன்ம பக்குவத்தை ஏற்படுத்துகிறான். நான் செய்த நல்ல செயல், கெட்ட செயல் ஆகியவற்றுக்கான பயனையே ஊழ்வனையாக நான் அனுபவிக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டால் இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் பகைவர் ஆக மாட்டார்.

Comments