சென்னை:
பணமதிப்பிழப்பு (Demonetisation) காலத்தில் ரூ.450 கோடி ரொக்கத் தொகை கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கியதாக அதிமுக முன்னாள் பொதுச் செயலர் வி.கே. சசிகலா மீது மத்திய குற்றப்புலனாய்வு துறை (CBI) வழக்கு பதிவு செய்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள அந்த சர்க்கரை ஆலை, ரூ.120 கோடி கடன் மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு, கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்ததோடு பல இடங்களில் சோதனையும் நடத்தியது.
2016 நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதற்கடுத்த சில வாரங்களில், சசிகலா ரூ.450 கோடி பழைய நோட்டுகளைப் பயன்படுத்தி ‘பத்மாதேவி சுகர்ஸ்’ என்ற சர்க்கரை ஆலையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாங்கியதாக சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ல் சசிகலா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், சர்க்கரை ஆலை குறித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆலையை நிர்வகித்த ஹிதேஷ் ஷிவ்கன் பட்டேல் தனது வாக்குமூலத்தில், வாங்கிய தொகை முழுவதும் பழைய நோட்டுகளாக வழங்கப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பத்மாதேவி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஹிதேஷ் ஷிவ்கன் பட்டேல், தினேஷ் ஷிவ்கன் பட்டேல், தம்புராஜ் ராஜேந்திரன், பாண்டியராஜ், வெங்கட பெருமாள் ஆகியோர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மோசடி கடன் பெறுதல், சொத்துகளை முறைகேடாக பயன்படுத்துதல், பிற நிறுவனங்களுக்கு பணம் மாற்றுதல், வட்டியில்லாத கடனாக வழங்குதல், பணமதிப்பிழப்பு நடைமுறையில் இருந்தபோது சந்தேகத்துக்குரிய பணத்தை ரொக்கமாக வங்கியில் செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
வருமான வரித்துறை, இந்த சர்க்கரை ஆலையை பினாமி சொத்தாக அறிவித்து, அதன் உண்மையான உரிமையாளர் சசிகலா எனத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.