சிரம்பான்:
போர்ட் டிக்சன், சுங்கை லிங்கியில் கார் ஆற்றில் விழுந்து உடன்பிறந்த இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களா என்பதில் இன்னும் தெளிவில்லை என
நெகிரி செம்பிலான் மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறை இயக்குநர் முஹம்மட் அஸ்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
6, 8 வயதுடைய அந்த சிறுவர்களை கிளாந்தானில் மதம் மாற்றியதாக தந்தை கூறினாலும், எந்தப் பதிவும் கிடைக்கவில்லை. தற்போது உடலை யாரும் கோராத நிலையில், தந்தை போலீசில் புகார் அளித்து மதத்தை உறுதிசெய்தால் மட்டுமே மேற்கொண்டு காரியங்களை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று காலை 11.40 மணியளவில், நிசான் தீனா கார் சுங்கை லிங்கி ஆற்றில் வழுக்கி விழுந்தது. அப்போது, இரு சிறுவர்கள் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் இருந்த ஒரு பெண் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். கார் மதியம் 4 மணிக்கு வாகனத்தை இழுக்கும் கருவி உதவியுடன் ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குழந்தைகளின் தாய் முஸ்லிம் அல்லாதவர் என்றும், தந்தைக்கு 16 குற்றப் பதிவுகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரை விசாரணைக்கு உதவ தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் Datuk Alzafny Ahmad குறிப்பிட்டுள்ளார்.