காத்மாண்டு:
நேபாள அரசு, பதிவு செய்யாததால் ஃபேஸ்புக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு வியாழக்கிழமை முதல் தடை விதித்துள்ளது.
பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு, நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு உட்பட்டு, அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதளங்களும் அரசில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆகஸ்ட் 28 அன்று சமூக வலைதள நிறுவனங்களுக்கு 7 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 4ஆம் தேதி முதல் பதிவு செய்யாத 26 நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டன. பதிவு செய்யும் வரை தடை நீடிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பேச்சுரிமை ஆர்வலர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இது அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களின் உரிமையை ஒடுக்குவதற்கான நடவடிக்கை” என அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் சிலர், “சமூக வலைதள நிறுவனங்கள் அரசின் கடுமையான நிபந்தனைகளை ஏற்க மறுத்ததே தடை விதிக்க காரணமாக இருந்திருக்கலாம்” என்றும் கூறினர்.
குறிப்பாக, நேபாளத்தில் 239 ஆண்டுகள் நீடித்த இந்து மன்னராட்சி 2008 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அப்போது பல ஆண்டுகள் நடைபெற்ற போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டபோதும், அந்தக் காலகட்டத்தில் சுமார் 16,000 பேர் உயிரிழந்தனர்.