ஈப்போ,
பேராக் மாநில சிம்பாங் பூலாய் பகுதியில் இன்று அதிகாலை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
“சநதேகத்துக்குரிய வாகனமொன்றை நிறுத்தச் சொன்ன போலீசாரின் உத்தரவை மீறி ஓட் டிய வாகன ஓட்டுநரை துரத்திய போலீசார், இறுதியில் ஒரு காட்டுப்பகுதி அருகே நிறுத்தினர்.
அப்போது, அந்த நபரை கைது செய்ய முயன்றபோது குற்றவாளி மற்றும் போலீஸ் அதிகாரி இடையே மோதல் ஏற்பட்டது. இதில், குற்றவாளி அந்த போலீசாரின் துப்பாக்கியை பறித்து வயிற்றில் சுட்டதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளான் . 26 வயதான அந்த போலீஸ் அதிகாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்: என பேராக் மாநில போலீஸ் தலைவர் நூர் ஹிசாம் நூர்தின் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் காரை சோதனையிட்ட போலீசார், பின்பக்க இருக்கையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தை கண்டெடுத்தனர். அந்த பெண்ணின் அடையாளம் மற்றும் மரண காரணத்தை உறுதி செய்ய பரிசோதனைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் கொலை (தண்டனைச் சட்டம் பிரிவு 302), கொலை முயற்சி (பிரிவு 307) மற்றும் துப்பாக்கி (அதிகப்படியான தண்டனை) சட்டம் 1971 பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளியை பிடிக்க தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் குறித்த தகவல் உள்ளவர்கள் உடனடியாக விசாரணை அதிகாரி ASP ஃபாத்லி அஹ்மத் (தொலைபேசி: 012-2500019) என்பவரை தொடர்பு கொள்ளுமாறும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.