புத்ராஜெயா:
மடானி ஒற்றுமை அரசாங்கத்தில் “மாற்றான் தாயின் பிள்ளை” என்ற கொள்கைக்கு எந்தவித இடமும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.
நாடு முழுவதும் நிலையான முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடுகள் வழங்கப்படுவது, மக்களின் தேவைகள் மற்றும் மாநிலங்களின் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.
எதிர்க்கட்சியினர் தலைமையிலான மாநிலங்களும் உட்பட அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒதுக்கீடு வழங்கும் போது அரசியல் நோக்குடன் அணுகுவதில்லை என்பதை அன்வார் வலியுறுத்தினார். “மடானி அரசாங்கம் எப்போதுமே தனது பொறுப்புணர்வுடன் மாநிலங்களுக்கு நியாயமான பங்கீட்டை வழங்கி வருகிறது. எனவே, புறக்கணிக்கப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை,” என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு கெடா, பெர்லீஸ், கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் மடானி அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாகவும், “இது அரசியல் காரணத்தால் அல்ல, தேவையின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.
மாநிலங்களுக்கு வளங்களும் மேம்பாடுகளும் வழங்கும் போது நீதி, ஒழுக்கம் மற்றும் நல்லாட்சிதான் மடானி அரசாங்கத்தின் அடித்தளம் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிகழ்ச்சியொன்றில் தெளிவுபடுத்தினார்.