கோலாலம்பூர்:
47வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய உச்சிமாநாடுகள் தொடர்பான முழுமையான ஒத்திகையின் ஒரு பகுதியாக, தலைநகரில் உள்ள பல முக்கிய சாலைகளில் நாளை (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 7.45 மணி வரை காவல்துறை படிப்படையான போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
நாளை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் இந்த ஒத்திகைகள், உச்சிமாநாட்டின் போது உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் பாதுகாப்பாகவும் சீராகவும் பயணிப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பாஸ்ரி தெரிவித்தார்.
“ஒத்திகையின் போது, போக்குவரத்து தடைசெய்யப்படும் சாலைகளைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் ,போக்குவரத்து காவல்துறையினரின் அறிவுறுத்தல்களையும் தற்காலிக அடையாள பலகைகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், குறித்த காலப்பகுதியில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதைவும் பரிசீலிக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.
இந்த சாலை மூடல்கள் காலை 8 மணி முதல் 8.45 மணி வரை, மற்றயது மாலை 7 மணி முதல் 7.45 மணி வரை என இரண்டு கட்டங்களாக மட்டுமே நடைபெறும்.
இந்த நடவடிக்கைகளுக்காக மொத்தம் 1,111 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் உச்சிமாநாட்டின் முழு காலத்திலும் போக்குவரத்து கட்டுப்பாடு, விஐபி பாதுகாப்பு பணிகள், மற்றும் அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும் முகமட் யூஸ்ரி தெரிவித்தார்.