கோத்தா பாரு:
மாச்சாங், சுங்கை உலு சாட் (Sungai Ulu Sat) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது அண்ணனைக் காப்பாற்ற முயன்ற 13 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று கம்போங் பெலுகாரில் உள்ள சுங்கை சாவா ஆற்றுப் பகுதியில் இந்தச் சிறுவன் தனது 15 வயது அண்ணனுடன் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அண்ணன் ஆற்றில் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக 13 வயது சிறுவன் ஆற்றில் குதித்துள்ளார் என, மாச்சாங் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டண்ட் அகமது ஷாஃபிகி ஹுசைன் கூறினார்.
இந்நிலையில் அண்ணன் ஆற்றின் ஓரத்தில் இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டு எப்படியோ தப்பித்துவிட்டார். ஆனால், அண்ணனைக் காப்பாற்ற முயன்ற தம்பி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
நேற்று மாலை 4.33 மணியளவில் மாச்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆற்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தேடுதல் நடத்தினர்.
இருப்பினும், இரவு 7.47 மணி வரை சிறுவனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், போதிய வெளிச்சமின்மை காரணமாகத் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சிறுவன் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.