Offline
Menu
எச்சரிக்கை: NSRC அதிகாரி போல் நடித்து நூதன மோசடி; ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய எண்ணைப் பறிகொடுத்த நபர்!
By Administrator
Published on 12/28/2025 09:00
News

கோலாலம்பூர்:

தேசிய மோசடி மறுமொழி மையத்தின் (NSRC) அதிகாரி என்று கூறி, மர்ம நபர் ஒருவர் போனில் அழைத்ததை நம்பி, தனது ஏடிஎம் (ATM) கார்டு மற்றும் அதன் ரகசிய குறியீட்டு எண்ணை (PIN) வழங்கி பணத்தை இழந்த நபர் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அவர் தான் NSRC அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் போன் நம்பர் தவறான அரசாங்க உதவிக்கான போலி இணைப்புகளைப் பரப்பப் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

 

பின்னர், ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்ட மற்றொரு நபரிடம் அந்த அழைப்பு மாற்றப்பட்டது. அந்த நபர், பாதிக்கப்பட்டவர் ஒரு பணமோசடி (Money Laundering) வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக மிரட்டியுள்ளார் என்று, புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (CCID) இயக்குனர் டத்தோ ரஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

 

விசாரணைக்காக உங்கள் ஏடிஎம் கார்டைச் சோதிக்க வேண்டும் என்று கூறி, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஏடிஎம் கார்டை வைக்குமாறு அந்த நபர் அறிவுறுத்தியுள்ளார். அதனை நம்பி ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை வழங்கிய பிறகு, தனது வங்கிக் கணக்கிலிருந்து சட்டவிரோதமாகப் பணம் எடுக்கப்பட்டதை அறிந்து பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியடைந்தார்.

 

பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க டத்தோ ரஸ்டி மிக முக்கியமான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்: அதாவது,
NSRC
என்பது ஒரு வழித் தொடர்பு மையம் (One-way call centre) மட்டுமே. அதாவது, பொதுமக்கள் மட்டுமே இந்த மையத்தை அழைத்து புகார் அளிக்க முடியும். NSRC அதிகாரிகள் ஒருபோதும் பொதுமக்களைத் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாகவோ தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

 

NSRC-ல் இருந்து அழைப்பு வருவதாகக் கூறினாலே அது 100% மோசடியாகும் என்றார் அவர்.

 

மேலும் போலீசார் தொலைபேசி வாயிலாக ஒருபோதும் விசாரணைகளை மேற்கொள்வதில்லை என்றும், அதிகாரப்பூர்வ விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் போலீஸ் நிலையத்திற்கு மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

 

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும், மோசடிக்கு ஆளாக நேரிட்டால் உடனடியாக போலீஸ் புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments

More news