Offline
Menu
49 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றம்-ஜோகூரில் பாதிப்பு அதிகரிப்பு!
By Administrator
Published on 12/30/2025 09:00
News
பகாங்கில் மீண்டும் வெள்ளம்: 49 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றம்-ஜோகூரில் பாதிப்பு அதிகரிப்பு!

கோலாலம்பூர்:

பகாங் (Pahang) மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜோகூர் (Johor) மாநிலத்தின் சிகாமாட் பகுதியில் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் எண்ணிக்கை இன்று மாலை உயர்ந்துள்ளது.

 

பகாங் மாநிலத்தின் ரொம்பின் (Rompin) பகுதியில் பெய்த தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மதியம் திறக்கப்பட்ட Balai Raya Kampung Setajam இல் திறக்கப்பட்ட நிவாரண மையத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதேநேரம் ரொம்பினில் உள்ள சுங்கை ரொம்பின் (கம்போங் கெர்பால்) மற்றும் சுங்கை பூக்கின் ஆகிய ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தைத் தாண்டி ஓடுகின்றன.

 

இந்நிலையில் ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 148-ஆக இருந்த நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி 173-ஆக (58 குடும்பங்கள்) உயர்ந்துள்ளது.

 

தற்போது அங்கு மொத்தம் 7 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கம்போங் பத்து பாடக், கம்போங் தாசேக், கம்போங் ஜாபி, பெக்கான் ஆயர் பானாஸ், செகாமட் கெச்சில் ஒராங் அஸ்லி கிராமம், எஸ்.ஜே.கே.(சி) தா காங் மற்றும் கம்போங் பாயா லேபார் ஆகிய இடங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.

 

சிகாமாட்டில் உள்ள சுங்கை மூவார் (கம்போங் அவாட்) மற்றும் சுங்கை மூவார் (புலோ காசாப்) ஆகிய இரண்டு ஆறுகளும் ஆபத்தான மட்டத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றன.

 

மேலும் பாதுகாப்பு கருதி பின்வரும் மூன்று முக்கிய சாலைகள் அனைத்து வாகனப் போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளன:

ஜாலான் ஜாபிபுக்கிட் தெம்புரோங் (சிகாமாட்): வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.

 

ஃபெல்டா தெங்காரோ 3 (மெர்சிங்): நிலச்சரிவு காரணமாகச் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

கிசாங்சுங்கை ரம்பாய் பாலம் (தங்காக்): பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பகாங், ஜோகூர், கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் இன்று வரை தொடர் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments