கோலாலம்பூர்:
மலேசியாவில் 2025-ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டுத் தொழிலாளர் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டைப் (Foreign Worker Quota) பெறுவதற்கான விண்ணப்பக் காலத்தை 2026 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி, வரும் 2025 டிசம்பர் 31 வரை விண்ணப்பங்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர், 2026 ஜனவரி 19 முதல் மார்ச் 31 வரை மொத்தம் 72 நாட்களுக்கு மீண்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும் என்று அது தெரிவித்துள்ளது.
2026 ஜனவரி முதல் மார்ச் வரை பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, தற்போதைய விதிமுறைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.
இந்த நீட்டிப்பு, 2025 அக்டோபர் 1 அன்று அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பொருளாதாரத் துறைகளுக்கும் (Sectors) பொருந்தும். இருப்பினும், உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) கீழ் உள்ள சேவைத் துறை (Services Sector) போன்ற சில பிரிவுகளுக்கு ஏற்கனவே உள்ள தகுதி வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடரும்.
முதலாளிகள் ஏஜெண்டுகள் அல்லது மூன்றாம் தரப்பினரின் தலையீடு இன்றி, நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் ‘ஒரே நிறுத்த மையத்தில்’ (One-Stop Centre) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 ஜனவரி 16 முதல் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்றும், அது தெரிவித்துள்ளது.