Offline
Menu
கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய BMW கார் – இருவர் காயம்!
By Administrator
Published on 01/01/2026 13:58
News

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு, தஞ்சோங் தோக்கோங் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகே நேற்று மதியம் நிகழ்ந்த கார் விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

அவர்கள் பயணம் செய்த BMW ரக கார் திடீரென சாலையை விட்டு விலகி (skidded), அங்கிருந்த ஒரு மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த மோதலினால் காரில் பயணம் செய்த 52 வயது ஆடவர் மற்றும் 31 வயது பெண் ஆகிய இருவர் காயமடைந்தனர்.

மதியம் 2.42 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, அங்கிருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களைக் காரிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர் என்று, பினாங்கு மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.

தீயணைப்புப் படை வீரர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தின் காரணமாகச் சாலையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருந்தது. மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தீயணைப்பு வீரர்கள் சாலையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, அந்தப் பகுதியைச் சீர்செய்தனர்.

விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments