நிபோங் திபால்:
பினாங்கு, சுங்கை பாக்காப்பில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மதியம் கூர்மையான ஆயுதங்களுடன் புகுந்த ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில், படுகாயமடைந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் உணவகத்தில் அமர்ந்து பானம் அருந்திக் கொண்டிருந்தபோது, சுமார் 15 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் திடீரென உள்ளே புகுந்து சரமாரியாகத் தாக்கியது.
அவர்கள் கத்திகள் மற்றும் வாள்கள் (Machetes) போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் உடலில் பல இடங்களில் பலத்த காயங்களுடன் செபெராங் ஜெயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்றாவதாகக் காயமடைந்த ஒருவர் சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று, பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 24 மற்றும் 36 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலைக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த மோதல் கடன் தகராறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தப்பியோடிய மீதமுள்ள நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று போலீஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.