அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68-வது கிராமி விருதுகள் விழாவில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மற்றும் சரோட் இசை மேதை உஸ்தாத் அம்ஜத் அலி கான் ஆகியோர் இணைந்து உருவாக்கிய 'Meditations' என்ற ஆல்பம் சிறந்த 'Best Audio Book, Narration, and Storytelling Recording' பிரிவில் விருதை வென்றுள்ளது. 90 வயதில் தலாய் லாமா பெறும் முதல் கிராமி விருது இதுவாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டி உலக நாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். "உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் கலைஞர்களின் வரிசையில் இணைந்திருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்; வார்த்தைகள் இந்த உலகத்து இசைக்கு கூடுதல் அர்த்தத்தைத் தருகின்றன" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இசை மேதை அம்ஜத் அலி கான் குறித்துப் பதிவிட்ட கமல், "அவருக்குப் புகழ்ச்சி தேவையில்லை, நாம் அனைவரும் இந்தத் தருணத்தை இணைந்து கொண்டாடுவோம்; உண்மை வெல்லட்டும்" எனத் தெரிவித்துள்ளார். ஆன்மீகமும் இசையும் இணைந்த இந்த சர்வதேச அங்கீகாரம் இந்தியாவுக்கும் ஒட்டுமொத்த இசை உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவர் தனது பதிவில் உணர்த்தியுள்ளார்.