Offline
Menu
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியா வருகை
By Administrator
Published on 02/21/2026 12:00
News

சிபாங், பிப்ரவரி 21, 2026:

மலேசியாவிற்குச் சிறப்பு வருகை மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று இரவு தாய்நாடு திரும்பினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முதலாவது முனையத்தில் அவருக்குச் சிறப்பான வழியனுப்பு விழா நடைபெற்றது. அரச ரெஜிமெண்டின் முதல் பட்டாலியன் மூலம் அவருக்குக் கௌரவப் பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமைத் தனிச் செயலாளர் டத்தோ ஷாரோல் அனுவார் சர்மேன் மற்றும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வாணு கோபால மேனன் ஆகியோர் அவரை சிறப்பாக வழியனுப்பி வைத்தனர்.

நேற்று மாலை 4.05 மணியளவில் மலேசியா வந்தடைந்த லாரன்ஸ் வோங், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நெகாரா (Seri Negara) மாளிகையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்துப் பேசினார்.

இரு தலைவர்களும் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, கடந்த 2025 டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பின் (Leaders’ Retreat) முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு முன்பாக, ஸ்ரீ நெகாரா மாளிகையில் உள்ள ‘ருவாங் மெர்தேகா: காலரி கசானா’ உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சிகளை இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.

லாரன்ஸ் வோங்கின் வருகையை முன்னிட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவருக்குச் சிறப்பு விருந்து அளித்துக் கௌரவித்தார்.மலேசியாவின் மிக முக்கிய அண்டை நாடாகவும், ஆசியான் (ASEAN) கூட்டமைப்பின் முக்கியப் பங்காளியாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது. 2025-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகச் சிங்கப்பூர் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு RM402.35 பில்லியன் ஆகும், இது 2024-ஐ விட 1.5 சதவீதம் அதிகமாகும்.

லாரன்ஸ் வோங் மற்றும் அவரது குழுவினர் பயணித்த மலேசியா ஏர்லைன்ஸ் (MH609) விமானம் இரவு 11.17 மணியளவில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டது.

 

Comments