Offline
Menu
எப்ஸ்டீன் விவகாரம்: மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்
By Administrator
Published on 02/28/2026 12:00
News

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க நபர்களுடன் தொடர்பில் இருந்த ஜெப்ரி எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிலவுகின்றன. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம், ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ சமீபத்தில், அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், உலக பெரும் பணக்காரர் பில்கேட்ஸின் பெயரும் இடம் பெற்று இருந்தது. இது தொடர்பாக தனது நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பேசிய பில்கேட்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார். பில்கேட்ஸ் இது குறித்து கூறியிருப்பதாவது:- எப்ஸ்டீன் உடனான எனது தொடர்பு பெரிய தவறு.

இது நன்கொடை அமைப்பின் நற்பெயர் குறித்து சந்தேகங்களை எழுப்பிவிட்டது. நான் எந்த தவறையும் செய்யவில்லை. சட்டவிரோதமாக எதையும் பார்க்கவில்லை. அவரை சுற்றி இருந்த பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுடன் நேரத்தை செலவிடவில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன். முகங்கள் மறைக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கூட்டங்களுக்கு பிறகு எப்ஸ்டீன் வேண்டுகோளின்படி அவர்களது உதவியாளர்களுடன் எடுக்கப்பட்டது. எப்ஸ்டீன் உடனான கடந்த கால தொடர்பு காரணமாக நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காகவும், நான் செய்த தவறு காரணமாக இதில் தொடர்புபடுத்தப்பட்ட மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

Comments