பகாங், குவாந்தான் அருகேயுள்ள சுங்கை லெம்பிங் பகுதியில் கைவிடப்பட்ட ஹோட்டல் ஒன்றை ஆன்லைன் மோசடித் தளமாக மாற்றி இயங்கி வந்த பன்னாட்டு மோசடி கும்பலை மலேசியக் குடிநுழைவுத் துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
சுமார் ஒரு மாதகாலத் தீவிரக் கண்காணிப்பிற்குப் பிறகு, நேற்று (அக்டோபர் 5) மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் 84 சீனா பிரஜைகள் மற்றும் ரஷ்யப் பெண் ஒருவர் உட்பட மொத்தம் 95 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சக்கரியா ஷாபான் தெரிவித்தார்.
“இந்த கும்பல் கடந்த மூன்று மாதங்களாக மலேசியாவில் ரகசியமாக இயங்கி வந்துள்ளது. வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்க ‘ஜெனர்ரேட்டர்கள்’ மூலம் மின்சாரமும், ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் சாதனம் மூலம் அதிவேக இணையத்தையும் பயன்படுத்தியுள்ளனர். உணவு சமைக்கத் தனி ஆட்களையும் நியமித்து, இயங்கியுள்ளனர்’ என அவர் மேலும் கூறினார்.
இச்சோதனையின் போது கட்டிடத்தின் உரிமையாளராகக் கருதப்படும் உள்ளூர்வாசி ஒருவர் மற்றும் அங்குப் பணியாற்றிய இரு மலேசியர்கள் என மொத்தம் 98 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களின் வயது 20 முதல் 75-க்குள் அடங்கும்.
அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வேலை ஒப்பந்தப் பத்திரங்களின்படி, ஊழியர்களுக்கு மாதம் RM3,000 சம்பளமும், இலக்கை எட்டினால் கமிஷனும், தவறினால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் 49 சீனா பாஸ்போர்ட்டுகள் மற்றும் கம்போடியா பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பலர் அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் அம்பலமாகியுள்ளது. இக்கட்டிடத்திற்கு மாத வாடகையாக மட்டும் RM30,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.