மலாக்கா:
மலாக்காவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனம் ஒன்றின் முதல்வரை, சுமார் 10,000 ரிங்கிட்டை லஞ்சமாகக் கேட்டுப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) கடந்த புதன்கிழமை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது.
சந்தேக நபரான 40 வயது மதிக்கத்தக்க ஆண், நேற்று மாலை 3 மணியளவில் மலாக்கா எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.
அவர் மீது, 2024ஆம் ஆண்டில், ஒரு உணவு விநியோக நிறுவன உரிமையாளரிடமிருந்து, சமைத்த உணவு விநியோகத் தொடர்பான பில் தொகையை அங்கீகரிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்த உணவு விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்றும், இதற்காக ரொக்கப் பணமாக லஞ்சம் பெறப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை ஐந்து நாட்கள் (மார்ச் 1, 2026 வரை) நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டு, ஆயேர் குரோ நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஒஸ்மான் அப்துல் கனி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.
மலாக்கா எஸ்பிஆர்எம் இயக்குநர் டத்தோ அடி சுப்பியான் ஷாஃபி இந்தக் கைதை உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு எஸ்பிஆர்எம் சட்டம் 2009ன் பிரிவு 17(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.