ஈரானுடனான இராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், தேவைப்பட்டால் அமெரிக்க தரைப்படை வீரர்களை (Ground Troops) அங்கு அனுப்ப தான் தயங்கப்போவதில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "Operation Epic Fury" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் இதுவரை வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தரைப்படை குறித்த இந்த கருத்து போரின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
முந்தைய அதிபர்களைப் போல தான் தரைப்படையை அனுப்பத் தயங்க மாட்டேன் என்று குறிப்பிட்ட டிரம்ப், தற்போது அத்தகைய தேவை இல்லை என்றாலும், நிலைமை மாறினால் "பூட்ஸ் ஆன் தி கிரவுண்ட்" (Boots on the Ground) திட்டத்தை அமல்படுத்தத் தயார் என நியூயார்க் போஸ்ட் (New York Post) நேர்காணலில் கூறியுள்ளார். ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிடும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த மோதல் சுமார் நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கத் தரைப்படை நுழையும் பட்சத்தில் அது ஒரு முழு அளவிலான பிராந்தியப் போராக மாறும் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.