Offline
Menu
கம்பார் அருகே நடந்த விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு!
By Administrator
Published on 03/20/2026 15:00
News

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS) கம்பார் அருகே இன்று மதியம் நிகழ்ந்த கோர விபத்தில் மலேசிய இராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் வடக்கே செல்லும் பாதையில், கிலோமீட்டர் 296.7 இல் கம்பார் அருகே, இன்று மதியம் சுமார் 2:20 மணியளவில் விபத்து நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட முகமட் ஆடம் இப்ராகிம் (வயது 27). இவர் SYM Husky 150 SE ரக மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த டிரெய்லர் லோரியின் வலதுபுற டயரில் லேசாக உரசியதாகத் தெரிகிறது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது, அதே டிரெய்லர் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று, கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டெண்ட் முகமட் நஸ்ரி தாவூத் கூறினார்.

இருப்பினும் 53 வயதான லோரி ஓட்டுநர் எந்தக் காயமுமின்றி தப்பினார்.

உயிரிழந்த வீரரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கம்பார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்டிகைக் காலங்களில் சாலைகளில் வாகன நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இது போன்ற சிறிய கவனக்குறைவுகள் கூட பெரிய விபத்துகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. ஜோகூர் அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வரும் 4 மணி நேர இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள், இதுபோன்ற களைப்பினால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க உதவும் என்று நம்புவோம்.

Comments