Offline
Menu
தென் கொரியா கார் பாகங்கள் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 55 பேர் காயம், 14 பேர் மாயம்
By Administrator
Published on 03/21/2026 13:00
News

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை மதிய உணவு நேரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 55 பேர் காயமடைந்தனர். இவர்களில் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 14 தொழிலாளர்களைக் காணவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாரிய விபத்தை அடுத்து, தென் கொரிய அரசாங்கம் ‘மத்திய பேரிடர் மேலாண்மை அமைப்பை’ (Centralised Disaster Management System) செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. அதிபர் லீ ஜே மியுங், உயிர்களைக் காக்கக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மாயமான 14 பேரின் செல்போன் சிக்னல்கள் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே காட்டுகின்றன. இருப்பினும், கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தப்பிக்க குதித்த தொழிலாளர்கள்: தீ விபத்து ஏற்பட்டபோது ஊழியர்கள் பலர் இரண்டாவது தளத்தில் உள்ள ஓய்வு அறையில் இருந்ததாக நம்பப்படுகிறது. தீயிலிருந்து தப்பிக்க சிலர் கட்டிடத்திலிருந்து கீழே குதித்ததில் காயமடைந்தனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி நிலவரப்படி, சுமார் 80% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தொழிற்சாலை ‘அஞ்சுன் இண்டஸ்ட்ரியல்’ (Anjun Industrial) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் என்ஜின் வால்வுகளைத் தயாரித்து ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இந்த விபத்து குறித்து அந்நிறுவனத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாதிப்பு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments