ஜோகூர், பாசிர் கூடாங் அருகே உள்ள இஸ்கந்தர் ஹலால் பூங்கா (Iskandar Halal Park) பகுதியில் இன்று காலை லோரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 4 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு இன்று காலை 10:46 மணியளவில் அவசர அழைப்பு வந்தது. நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி இஸ்ஸாவதி சுபார்டி (Iszahwati Supardi) தலைமையிலான 6 வீரர்கள் அடங்கிய குழுவினர் 11 கி.மீ தொலைவில் உள்ள விபத்து இடத்திற்கு விரைந்தனர்.
வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சரக்கு ஏதும் இல்லாத லோரி ஒன்று பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது. லோரியின் முன்பகுதி சுமார் 60% தீயினால் சூழ்ந்திருந்தது.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, அங்கிருந்த பொதுமக்கள் உலர்ந்த பவுடர் தீயணைப்பான்கள் (Fire extinguishers) மற்றும் ஒரு பேக்ஹோ (Backhoe) இயந்திரத்தைப் பயன்படுத்தி மண்ணை அள்ளிப் போட்டுத் தீயை அணைக்கப் போராடினர்.
இந்த விபத்தில் சிக்கிய லோரியை ஓட்டி வந்த தந்தை தீயிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்தார். ஆனால் லோரியின் உள்ளே இருந்த அவரது 4 வயது மகன் தீயின் பிடியில் சிக்கிக்கொண்டான். துரதிர்ஷ்டவசமாக அச்சிறுவனை மீட்க முடியாமல் போனது.
தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, லாரியின் உள்ளே அந்தச் சிறுவன் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
மதியம் 1:30 மணியளவில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. லாரியில் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் குறித்துத் தீயணைப்புத் துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.