புதிய தனியார் மருத்துவமனைகளைப் பதிவு செய்வதிலும், உரிமங்களைப் புதுப்பிப்பதிலும் ஏற்படும் நிர்வாகத் தாமதங்களைச் சீரமைக்கச் சுகாதார அமைச்சு எடுத்துள்ள முடிவை மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் (APHM) வரவேற்றுள்ளது.
தற்போதுள்ள நீண்ட நெடிய பதிவு நடைமுறைகளால் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. இந்தச் செலவுகள் இறுதியில் நோயாளிகளிடமே வசூலிக்கப்படுகின்றன என்று, APHM தலைவர் டத்தோ டாக்டர் குல்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை விரைவுபடுத்தத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை பிரிவு மருத்துவமனைகள் திறம்பட செயல்படுகின்றன. தரம் குறையாமல் உரிமப் புதுப்பித்தல் பணிகளைத் திறம்படச் செய்ய ‘சுய கட்டுப்பாட்டு’ (Self-regulation) முறையைச் சங்கம் பரிந்துரைத்துள்ளது என்று, நேற்று நடைபெற்ற தனியார் மருத்துவச் செலவினங்களுக்கான கூட்டுக் குழு (JBMKKS) கூட்டத்திற்குப் பிறகு, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.
தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (சட்டம் 586)-இன் கீழ் உள்ள உரிமம் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளை அமைச்சு மறுஆய்வு செய்து வருகிறது.
தனியார் மருத்துவப் பயிற்சி கட்டுப்பாட்டுப் பிரிவின் (CKAPS) செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தேவையற்ற கால தாமதங்களைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதியமைச்சர் II அமீர் ஹம்ஸா அஸிஸான் கூறுகையில், பேங்க் நெகாரா மலேசியா (BNM) அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் (CEOs) ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மலேசியச் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் இந்தப் பிரிவு, தனியார் மருத்துவமனைகளின் உரிமம், பதிவு, ஆய்வு மற்றும் புகார்களைக் கையாள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தனியார் மருத்துவமனைகள் பொதுச் சுகாதாரத் துறைக்கு மாற்றாக இல்லாமல், அதற்குத் துணையாகவே செயல்படும் என்று டாக்டர் குல்ஜித் சிங் உறுதி அளித்தார். அதேவேளையில், உலகளாவிய தரத்திற்கு இணையாகச் செயல்பட மருத்துவமனைகளின் நிதி நிலைத்தன்மை (Sustainability) மிக முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.