Offline
Menu
23 சம்மன்கள் – கேமராக்கள், கைபேசிகள் பறிமுதல்!
By Administrator
Published on 04/23/2026 14:00
News

கோலாலம்பூர் மாநகர மையப் (KLCC) பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் வசூலிக்கும் ‘உலாட் ஃபோட்டோ’ (Ulat Foto) நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) அதிரடிச் சோதனையை நடத்தியுள்ளது.

‘ஓப் லென்ஸ்’ (Op Lens Series 6/2026) என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனையில், காவல்துறை, குடிவரவுத் துறை மற்றும் தேசியப் பதிவுத் துறை (JPN) ஆகியவை இணைந்து செயல்பட்டன.

இந்தச் சோதனையின் போது மொத்தம் 23 சம்மன்கள் (Compounds) விநியோகிக்கப்பட்டன. மேலும், சட்டவிரோதப் புகைப்படத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட 28 உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றில் புகைப்படக் கருவிகள், கைபேசிகள் மற்றும் இதர மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு, ஆவணப்படுத்துவதற்காக மாநகராட்சி கிட்டங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் 7 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மன் தொகையைச் செலுத்தத் தவறிய 4 பேருக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது 31 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் நான்கு பேரின் அடையாள ஆவணங்கள் மற்றும் குடியுரிமை நிலையை மேலதிகமாகச் சரிபார்க்க, தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் தற்காலிகமாகப் பெறப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று, கோலாலம்பூர் நகராண்மை கழகம் அதன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

இத்தகைய அனுமதியற்ற புகைப்படத் தரகர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு, போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நகரின் ஒழுங்கைப் பராமரிக்கவும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இந்த அதிரடி நடவடிக்கை மூலம் KLCC பகுதியைச் சுற்றியுள்ள பொது இடங்களில் அனுமதியற்ற வணிகச் செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Comments