Offline
Menu
யோங் பெங் மாணவி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ‘CCTV’ கேமராக்கள் இல்லை
By Administrator
Published on 10/06/2026 16:00
News

கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் நாடாளுமன்றத்தில் பரபரப்பு தகவல்

 

ஜோகூர், யோங் பெங் மேல்நிலைப் பள்ளி மண்டபத்தில் படிவம் 4 மாணவி ஐரின் சோஃபியா படுகொலை செய்யப்பட்ட குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

 

இன்று திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளியில் CCTV கேமராக்கள் இருந்தபோதிலும் குற்றம் நடந்த குறிப்பிட்ட இடத்தில் கேமராக்கள் இல்லை என்பதையும், இந்த வழிகாட்டல் குறைபாடுகள் உடனடியாகச் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.

 

“பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்யக் கட்டணம் பெற்றுக் கொண்டு, தங்களது கடமையிலிருந்து தவறியிருந்தால் சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும். அவர்களின் வருகைப் பதிவேடுகள் மற்றும் பணிப் பதிவுகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன” என்றும் டத்தோஸ்ரீ பட்லினா சிடேக் கூறினார்.

 

இக்கொலை வழக்கு தொடர்பான காவல் துறை விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விதிமீறல்கள் மீது உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் RM1.5 கோடி செலவில் மேலும் 1,000 பள்ளிகளில் CCTV கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

 

இச்சம்பவம் தொடர்பாக 16 வயது மாணவன் உட்படப் பல மாணவர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்பதால், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments