Offline
Menu
மித்ராவுக்கு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
By Administrator
Published on 05/11/2026 12:00
News

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான அதன் நிதி ஒதுக்கீட்டில் கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் வழங்குவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.கோலாலம்பூர், மலாயா பல்கலைகழகத்தின்  துங்கு சன்சலர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றஇந்திய மாணவர்களுடனான பிரதமரின் கலந்துரையாடல்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

 

2026-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மித்ராவுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரிங்கிட்டுடன் சேர்த்து, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் நிதியையும் சேர்த்து இந்த ஆண்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. மித்ரா அமைப்பு கடந்த காலாண்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதைக் கண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

​​இந்தியச் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் நிதி உதவிகளை முறையாகக் கொண்டு சேர்ப்பதில் மித்ரா காட்டிய வேகமும் வெளிப்படைத்தன்மையும் பாராட்டுக்குரியது என பிரதமர் தெரிவித்தார். மித்ராவுக்கு வழங்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி போதாது என்பதைத் தாம் உணர்ந்திருப்பதாகவும், அதன் காரணமாகவே கூடுதல் நிதிக்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் நிதி அமைச்சருமான பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கமளித்தார்.

 

மேலும், தமது தலைமையிலான அரசாங்கம் இனப் பாகுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கும் சமூக நீதியை வழங்குவதில் உறுதியாக இருப்பதாக அவர் உறுதி அளித்தார். மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயர்க்கல்வியின் இந்திய  மாணவர்களுக்கான  பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பிரதமர் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

Comments