Offline
Menu
மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் மெகா திட்டம்; அமைச்சர் ரமணன் அறிவிப்பு!
By Administrator
Published on 05/30/2026 11:00
News

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு (மித்ரா), நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஆறு புதிய திட்டங்களை அமலாக்குவதன் வழி இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இங்குள்ள HRD Corp தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படவுள்ள அதிகபட்சமாக RM50,000 வரையிலான தொழில் தொடக்க வணிக மானியங்கள் உட்பட, பி40 மற்றும் எம்40 பிரிவினரை முதன்மை இலக்காகக் கொண்ட இந்த ஆறு புதிய திட்டங்களுக்கும் ஒட்டுமொத்தமாக RM65.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

“அனைவரையும் உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையை வலியுறுத்தும் மடானி அரசின் கோட்பாட்டிற்கு இணங்க, பொதுச் சேவைத் துறையின் (JPA) ஒப்புதலோடு மித்ரா பிரிவு தற்போது மனிதவள அமைச்சின் கீழ் ஒரு முழுமையான இலாகாவாக (Jabatan) தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேம்பாட்டின் மூலம் சமூக மேம்பாட்டுப் பணிகளை மேலும் முறையான, வெளிப்படையான, திறமையான மற்றும் அதிக தாக்கம் கொண்ட முறையில் மித்ராவால் செயல்படுத்த முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார். அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அந்த 6 புதிய திட்டங்களின் முழுமையான விவரங்கள் வருமாறு:

கல்வித் திட்டங்கள் (INISIATIF PENDIDIKAN)

2026 ஆம் ஆண்டு எஸ்பிஎம் (SPM) மற்றும் எஸ்டிபிஎம் (STPM) எழுதவிருக்கும் சுமார் 5,000 பி40 மாணவர்களின் கல்விச் சாதனையை மேம்படுத்த, தேர்வுத் தயாரிப்பு, வழிகாட்டல் மற்றும் ஊக்கமூட்டும் வகுப்புகளுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

RM5 மில்லியன் ஒதுக்கீட்டைக் கொண்ட இத்திட்டத்திற்கான ‘திட்ட முன்மொழிவுக் கோரிக்கை’ (RFP) ஜூன் 5 முதல் திறக்கப்படும். கல்வி அமைச்சின் (KPM) கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, மலாய், தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் வரலாறு போன்ற முக்கிய பாடங்களை வழங்கும் டியூஷன் மையங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் பி40 மாணவர்களுக்கும், புறநகர்ப் பகுதி மற்றும் இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Comments