தாப்பா:
டிக் டாக் நேரலையின் (TikTok Live) போது, ஒராங் அஸ்லி (Orang Asli) பழங்குடியினக் கிராமத் தலைவர் (Tok Batin) குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக வாலிபர் ஒருவரைப் போலீசார் கைது செய்து 4 நாட்கள் தடுப்புக் காவலில் (Remand) வைத்துள்ளனர்.
இன்று காலை சுமார் 8:50 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபரை, நான்கு நாட்களுக்குக் காவலில் எடுத்து விசாரிக்கத் தாப்பா மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நூருல் ஹிதாயு ஜகாரியா உத்தரவிட்டார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 500-ஆவது பிரிவு (அவதூறு), 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் அலைவரிசைச் சட்டத்தின் 233-ஆவது பிரிவு மற்றும் 1955-ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் 14-ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
“பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து பெறப்பட்ட 11 போலீஸ் புகார்களின் அடிப்படையில், 30 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர் நேற்று மதியம் 1 மணியளவில் ஈப்போவில் (Ipoh) உள்ள அவரது வீட்டில் வச்சு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்” என்று, தாப்பா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் மாலிக் ஹாசிம் கூறினார்.
கூனுங் பத்து புத்தே (Gunung Batu Putih) மலையேற்றத்தின் போது காணாமல் போய், 14 நாட்களுக்குப் பிறகு கம்போங் லுபுக் காஹாரு ஒராங் அஸ்லி கிராம மக்களால் ஜஸ்லிந்தா சாலுடின் (வயது 49) என்ற பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.
ஆனால், கைதான நபர் தனது டிக் டாக் நேரலையின் போது, “காணாமல் போன மலையேற்ற வீராங்கனை ஜஸ்லிந்தாவை அந்தக் கிராமத்தின் தலைவர் (Tok Batin) முகமட் அஸ்மாடி அப்துல்லா கடந்த இரண்டு வாரங்களாகத் ரகசியமாகத் தன் வசம் வைத்துள்ளார். இந்த விஷயம் சமூக ஊடகங்களில் வைரலாகாமல் இருந்திருந்தால், அவர் அந்தப் பெண்ணைத் திருமணமே செய்திருப்பார்” என்று முற்றிலும் உண்மைக்கு மாறான அவதூறைப் பரப்பியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த நபர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு காணொளியையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சட்ட விதிகளின்படி அவர் மீது தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு மேல்விசாரணை நடந்து வருகிறது.