கோலாலம்பூர்:
பாரிஸில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற பிஎஸ்ஏ ஸ்குவாஷ் டூர் (PSA Squash Tour) தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று, மலேசியாவின் முன்னணி வீராங்கனை எஸ். சிவசாங்கரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், எகிப்தின் பலத்த சவாலாக விளங்கிய முன்னணி வீராங்கனை அமினா ஓர்ஃபியை (Amina Orfi) 8-11, 11-10, 11-8, 11-10 என்ற செட் கணக்கில் சிவசாங்கரி வீழ்த்தினார். சுமார் 74 நிமிடங்கள் மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின் கிட்டிய இந்த அசாத்திய வெற்றியின் மூலம், கடந்த 2012-ஆம் ஆண்டில் டத்தோ நிக்கோல் டேவிட் படைத்த சாதனைக்குப் பிறகு, இத்தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் கெடாவைச் சேர்ந்த 27 வயது சிவசாங்கரி, இன்று நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் எகிப்தின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஹானியா எல் ஹமாமியை (Hania El Hammamy) எதிர்கொள்ளவிருக்கிறார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ‘கிராஸ்ஹோப்பர் கோப்பை’யைக் கைப்பற்றி அசத்திய சிவசாங்கரி, நடப்பு ஆண்டின் தனது அடுத்த உலகளாவிய பட்டத்தைத் தட்டிச் செல்லும் தீவிர முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் களம் காண்கிறார்.