கோலாலம்பூர்:
திரெங்கானு மாநிலத்தில் உள்ள டுங்குன், கம்போங் கோலா அபாங் பகுதியில் 79 வயது பாட்டியை அவரது பேரனே சுத்தியலால் தலையில் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய அந்தப் பேரனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 6.55 மணியளவில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் வீட்டை விட்டு வெளியேற முயன்றுள்ளார். அப்போது அவரை முதியவர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த பேரன் பாட்டியை கீழே தள்ளிவிட்டு, சுத்தியலால் அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்துப் பேசிய டுங்குன் மாவட்டப் போலீஸ் தலைவர் நிக் அப்டுல் ஹாலிம் நிக் மாட், “காயமடைந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு டுங்குன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சுத்தியலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட பேரனிடம் ‘மனநல நோயாளிக்கான மருத்துவ அட்டை’ (Mental Patient Card) இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 326-இன் (ஆபத்தான ஆயுதங்களால் கடுமையான காயம் விளைவித்தல்) கீழ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.