Offline
Menu
ம.இ.கா. 80ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பெனால்டி கிக் போட்டி: 48 அணிகள் உற்சாக பங்கேற்பு
By Administrator
Published on 06/21/2026 10:00
News

மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா.) தனது 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய பெனால்டி கிக் கால்பந்து போட்டி இன்று புந்தோங் ஐ.ஆர்.சி. மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது.ஈப்போ தீமோர், ஈப்போ பாராட், பத்து காஜா தொகுதிகளின் இளைஞர் பிரிவுகள் இணைந்து ஏற்பாடு செய்த இப்போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தின.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பேராக் ம.இ.கா. இளைஞர் தலைவர் தியாகேஸ் கணேசன், குறுகிய காலத்திலேயே போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது பெரும் வெற்றியாக அமைந்துள்ளதாகக் கூறினார்.ஒவ்வொரு அணியிலும் ஐந்து வீரர்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்த அவர், புந்தோங் பகுதி இளைஞர்களிடையே ம.இ.காவிற்கு கிடைத்து வரும் ஆதரவையும் வரவேற்பையும் இந்த நிகழ்வு தெளிவாக எடுத்துக்காட்டியதாக குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 80 ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக ம.இ.கா. தொடர்ந்து சேவையாற்றி வருவதாக அவர் கூறினார்.இளைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இதுபோன்ற விளையாட்டு , சமூக நிகழ்ச்சிகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடத்தப்படும் என அவர் சொன்னார். ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் , தேசிய இளைஞர் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு இளைஞர் சார்ந்த நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இப்போட்டி இளைஞர் அணியினரின் ஒத்துழைப்பால் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் என தியாகேஸ் கணேசன் தெரிவித்தார்.

Comments

More news