Offline
Menu
வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியாவிற்கு வருகை
By Administrator
Published on 06/23/2026 08:00
News

கோலாலம்பூர்:

வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman), மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இன்று அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியா வந்தடைந்தார். இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இப்பயணம் அமைகிறது.

பிப்ரவரி 2026-இல் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, தாரிக் ரஹ்மான் வெளிநாட்டிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ இருதரப்புப் பயணம் இதுவாகும்.

மலேசிய வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி,

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் புங்கா ராயா வளாகத்திற்கு நேற்று இரவு வந்தடைந்த அவருக்கு, பிரதமர் துறை அமைச்சர் டத்தோ சுல்கிப்லி ஹசான் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ரா வளாகத்தில் பிரதமர் அன்வாருடன் நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, மனிதவள மேலாண்மை மற்றும் செமிகண்டக்டர் துறை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

மேலும், பயங்கரவாத எதிர்ப்பு ஆராய்ச்சி, கலாச்சார ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக வங்காளதேசம் திகழ்கிறது.

மேலும் பிரதமர் தாரிக் ரஹ்மானுடன் அவரது மனைவி டாக்டர் சுபைதா ரஹ்மான், வெளியுறவு அமைச்சர் டாக்டர் கலிலூர் ரஹ்மான் மற்றும் வங்கதேச அரசின் உயர் அதிகாரிகள் மலேசியா வருகை தருகின்றனர். அவர்களுக்குப் பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ மதிய விருந்து அளித்து கௌரவிப்பார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments