Offline
Menu

LATEST NEWS

தேர்தல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த திமுக நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை
By Administrator
Published on 06/25/2026 08:00
News

சென்னை பழவந்தாங்கல் நேரு காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (56 வயது). திமுகவின் 164-வது வட்ட செயலாளராக நீண்ட காலமாக இருந்து வந்தார். ஆலந்தூர் நகராட்சியாக இருந்த காலத்தில் கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவரது மனைவி தேவி ஏசுதாஸ் தற்போது சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தின் 164-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தேவி ஏசுதாஸ், ஏசுதாஸ் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை பலமுறை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால், மகன்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலுடன் இருந்து வந்தது தெரிய வந்தது. தேர்தல் தோல்வி குறித்து அடிக்கடி வருத்தத்துடன் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு அறைக்கு சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments