மலாக்காவில் போக்குவரத்துச் சந்திப்பு ஒன்றில் புரோட்டோன் சாகா (Proton Saga) கார் ஓட்டுநர் ஒருவர், மற்றொரு வாகனமோட்டியைத் தாக்கிய விபரீதச் சம்பவம், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சுமுக உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த ஒரு நிமிடக் காணொளியில், கடந்த புதன்கிழமை மாலை 6.20 மணியளவில் அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் (AMJ) நெடுஞ்சாலையில் உள்ள கண்டாங் (Kandang) போக்குவரத்துச் சந்திப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட புரோட்டோன் சாகா ஓட்டுநர் திடீரென காரை நிறுத்திவிட்டு, பின்னால் நின்ற காரை நோக்கிச் சென்று அதன் ஜன்னலைத் தாக்கியுள்ளார். பின்னர் கதவைத் திறந்து உள்ளே இருந்த ஓட்டுநரை சரமாரியாகக் குத்தியும், உதைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தாக்குதல் நடத்திய நபரின் மனைவி என நம்பப்படும் பெண் ஒருவர், கையில் குழந்தையுடன் ஓடிவந்து அவரைத் தடுத்து அமைதிப்படுத்த முயன்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இரு வாகன ஓட்டிகளுக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதல் மற்றும் அதிருப்தி காரணமாகவே இந்த மோதல் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து மலாக்கா தெங்கா தற்காலிக மாவட்ட காவல்துறை தலைவர் சூப்பரிண்டெண்டென்ட் ஹலிம் அபாஸ் கூறுகையில், “புகார்தாரர் மற்றும் சந்தேக நபர் என இருவருமே விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். பின்னர், இரு தரப்பும் சுமுகமாகப் பேசி, இந்த விவகாரத்தை மேலும் வளர்க்க விரும்பாமல் சமரசமாகப் போக முடிவு செய்தனர்.”
“தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அவர்கள், இனிவரும் காலங்களில் சாலையில் செல்லும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, கவனமாக நடந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர்” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.