Offline
Menu
காரில் RON95 மானியவிலை பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு RM20,000 அபராதம்!
By Administrator
Published on 07/04/2026 11:00
News

சிங்கப்பூர் பதிவெண் கொண்ட தனது வாகனத்திற்கு, மலேசியாவின் மானிய விலையிலான ‘ரோன்95’ (RON95) பெட்ரோலை சட்டவிரோதமாக நிரப்பிய சிங்கப்பூர் ஓட்டுநர் ஒருவருக்கு ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் 20,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி டத்தோ சே வான் ஜைடி சே வான் இப்ராஹிம் தீர்ப்பளித்தார். வாகனத்தின் உரிமையாளரான 50 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி அன்றைய தினமே அபராதத் தொகையைச் செலுத்தினார்.

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) அமலாக்க அதிகாரிகள் நடத்திய ‘ஒப் திரிஸ் 4.0’ (Op Tiris 4.0) சோதனையின் போது, அந்த நபர் இங்குள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் தனது காரில் ரோன்95 பெட்ரோலை நிரப்பியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

மலேசிய சட்டப்படி வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மானிய விலை பெட்ரோல் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ‘கட்டுப்பாட்டுப் பொருட்கள் சட்டம் 1961’-இன் கீழ் குற்றம் இழைத்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து ஜொகூர் மாநில KPDN இயக்குனர் லிலிஸ் சஸ்லிந்தா பொர்னோமோ கூறுகையில், “மலேசிய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கவும், நாட்டின் கட்டுப்பாட்டுப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சான்றாகும்” என்றார்.

மேலும், எரிபொருள் நிலையங்களில் மானிய விலை பெட்ரோல் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டால், பொதுமக்கள் உடனடியாக அமைச்சின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் (019-848 8000), ‘e-Aduan’ இணையப் பக்கம் அல்லது ‘Ez ADU KPDN’ செயலி வழியாகப் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments