Offline
Menu

LATEST NEWS

“ஜோகூரின் பலம் ஒற்றுமையில்; எந்த சமூகமும் புறக்கணிக்கப்படாது” – மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஒன் ஹாஃபிஸ்
By Administrator
Published on 07/05/2026 17:00
News

ஜோகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜோகூர் மந்திரி பெசாரும் பாரிசான் நேஷனல் மாநிலத் தலைவருமான ஒன் ஹாஃபிஸ் காசி, கூலாய், குளுவாங், ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளில் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுடன் இணைந்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பிரசாரப் பயணத்தின் போது பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடிய அவர், ஜோகூரின் எதிர்காலம் குறித்த மக்களின் கருத்துகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நேரடியாகக் கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.

ஜோகூரின் மிகப்பெரிய பலம் அதன் மக்கள் ஒற்றுமைதான் என்றும், அனைத்து இன மக்களும் இணைந்து பயணிப்பதால்தான் மாநிலத்தின் வளர்ச்சி உறுதியடையும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்த சமூகமும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதோடு, எந்தப் பகுதியும் மாநில வளர்ச்சியின் ஓட்டத்தில் பின்தங்க விடப்பட மாட்டாது என்பது பாரிசான் நேஷனலின் உறுதியான நிலைப்பாடு என்றும்

வரும் தேர்தலில் மக்களின் குரலையும் நம்பிக்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் முழுமையான ஆதரவை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

லாயாங்-லாயாங், மெங்கிபோல், மகோத்த்கா, காஹாங், புத்ரி வாங்சா, ஜோகூர் ஜெயா, ஸ்துலாங், ஸ்கூடாய், கோத்தா இஸ்கந்தர், புக்கிட் பெர்மாய், புக்கிட் பத்து, செனாய் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள் மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்படத் தயாராக உள்ள தலைவர்கள் என்றும், மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் வலுவாக எடுத்துரைக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் ஒன் ஹபீஸ் தெரிவித்தார்.

பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இவ்வேட்பாளர்கள், ஒற்றுமை, நேர்மை, திறமை, பொறுப்புணர்வு, மக்கள் நெருக்கம் ஆகிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்கின்றனர் என்றும் அவர் கூறினார். மாநில வளர்ச்சித் திட்டங்களை இடையூறு இல்லாமல் தொடரச் செய்து, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை உருவாக்கும் வல்லமை அவர்களிடம் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கு மீண்டும் வலுவான மக்கள் ஆணை கிடைத்தால், மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மை பாதுகாக்கப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு முன்னேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம், மக்களின் நலன் ஆகியவை மேலும் வலுப்பெறும் என்று ஒன் ஹபீஸ் தெரிவித்தார்.

“முன்னேறிய, வளமான, அனைவரையும் உள்ளடக்கிய ஜோகூரை உருவாக்கும் பயணத்தை தொடர, மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் பாரிசான் நேஷனலுக்கு அவசியம்,” என அவர் வலியுறுத்தினார்.

Comments