Offline
Menu
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதில் ஜோகூர் முதலிடம்; ‘டேஷ்கேம்’ ஆதாரங்களை வழங்குமாறு போலீஸ் அழைப்பு!
By Administrator
Published on 07/05/2026 18:00
News

மலேசியாவில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டிய வழக்குகள் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை (JSPT) எச்சரித்துள்ளது.

இத்தகைய ஆக்ரோஷமான ஓட்டுநர் முறை, சாலையில் வம்புச்சண்டை (Road Bullying) மற்றும் சாலை வன்முறை (Road Rage) சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இது கவலையளிக்கும் போக்காக உருவெடுத்துள்ளது.

JSPT இயக்குனர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா அலி இது குறித்துக் கூறுகையில், கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 28 வரையிலான காலகட்டத்தில் 1,278 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 852 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த வேளையில், இந்த ஆண்டு 426 வழக்குகள் அதிகரித்துள்ளன.

மாநில வாரியாக பார்த்தால், இந்த ஆண்டில் ஜொகூர் மாநிலம் 354 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, கோலாலம்பூர் – 230, சிலாங்கூர் – 200, நெகிரி செம்பிலான் – 119, கிளாந்தான் – 84, மற்றும்

பேராக் – 60 என பதிவாகியுள்ளன.

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் இருப்பது, ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயல்வது, திடீரென குறுக்கே புகுவது, பிற வாகனங்களை மிக நெருக்கமாகப் பின்தொடர்வது (Tailgating) மற்றும் வழிவிட மறுப்பது ஆகியவை சாலை வன்முறைக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. மேலும், அதிகப்படியாக ஹார்ன் அடிப்பது, தகாத சைகைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஓட்டுநர்களிடையே ஆத்திரத்தைத் தூண்டுகின்றன.

சில ஓட்டுநர்கள் போதைப்பொருள் கலந்த வேப் புகையிலையைப் பயன்படுத்துவதாகச் சமூக ஊடகங்களில் வெளியாகும் புகார்கள் குறித்துப் பேசிய அவர், செயற்கை போதைப்பொருள் கலந்த வேப் பயன்பாடு அதிகரித்து வருவதை போலீஸ் அறிந்துள்ளது என்றார். இதனால், விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை (Saliva test) மற்றும் சிறுநீர் பரிசோதனைகளைக் கட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 42-இன் கீழ் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 5,000 ரிங்கிட் முதல் 15,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம். இது தவிர, வன்முறையில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் சட்டம் (Penal Code) மூலமாக காயப்படுத்துதல், சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்களின் காரில் உள்ள ‘டேஷ்கேம்’ (Dashcam) பதிவுகள் அல்லது சிசிடிவி காட்சிகளைப் போலீசாருக்கு வழங்கி ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments