Offline
Menu

LATEST NEWS

கிள்ளானில் அதிரடி வேட்டை: RM409,818 மதிப்புள்ள கடத்தல் மதுபானங்கள் பறிமுதல், இருவர் கைது!
By Administrator
Published on 07/16/2026 10:00
News

சிலாங்கூர், கிள்ளானில் உள்ள ஜாலான் பெராயில் (Jalan Berai) நேற்று நடத்தப்பட்ட ‘ஓப்ஸ் தாரிங் ஆல்ஃபா 2’ (Ops Taring Alpha 2) அதிரடி சோதனையில், வரி செலுத்தப்படாத 100 பெட்டி கடத்தல் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இந்தியப் பிரஜை ஒருவர் உட்பட நாற்பது வயது மதிக்கத்தக்க இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய ராயல் போலீஸ் படையின் (PDRM) பொதுப் பாதுகாப்புப் படை (GOF) 4-வது பட்டாலியன் கட்டளை அதிகாரி சுப்ரிடெண்டண்ட் அமன்ஜித் சிங் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மதியம் 1 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் லாரியிலிருந்து காருக்கு பெட்டிகளை மாற்றிக் கொண்டிருந்தபோது இவ்விருவரும் கச்சிதமாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

“அவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்களைச் சோதனையிட்டதில், சுங்கவரி செலுத்தப்படாத ‘ராயல் டச்சு’ (Royal Dutch) ரக மதுபானங்கள் அடங்கிய 100 பெட்டிகள், ஒரு லாரி, ஒரு கார் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவை கண்டறியப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்தப் பொருட்களின் மதிப்பு சுமார் RM409,818 என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

செமினியில் உள்ள GOF 4-வது பட்டாலியனின் உளவுப்பிரிவு, கிள்ளான் செலாத்தான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றத் தடுப்புக் காவல் பிரிவு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்போடு சேகரிக்கப்பட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் பறிமுதல் செய்யப்பட்டப் பொருட்களும் மேல் விசாரணைக்காகக் கிள்ளான் செலாத்தான் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சுங்கவரிச் சட்டம் 1967, குடிவரவுச் சட்டம் 1959/63 மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து போலீசாருக்கு வழங்குமாறு பொதுமக்களை அமன்ஜித் கேட்டுக்கொண்டார்.

Comments

More news