எல்லை கடந்த சுற்றுலா, விருந்தோம்பல் துறை மற்றும் முதலீடுகளை வலுப்படுத்துவதற்காக, தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் வணிக அமைப்புகளுடன் புதிய கூட்டாண்மை மூலம் அந்நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மலேசியா தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.அந்த வகையில் மலேசிய பட்ஜெட் மற்றும் வணிக ஹோட்டல் சங்கம் மைபா தாய்லாந்து சுற்றுலா முகவர்கள் சங்கம் , தாய்லாந்து மருத்துவ சுற்றுலா மற்றும் நல்வாழ்வு சங்கம் மற்றும் சி.எச்.ஜி குளோபல் ஆர்கனைசேஷன் ஆகியவற்றுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பானது சுற்றுலா பரிமாற்றத்தை விரிவுபடுத்துவதையும், மருத்துவ மற்றும் நல்வாழ்வு சுற்றுலாவை மேம்படுத்துவதையும், தொழில் துறை சார்ந்தவர்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மைபாவின் தேசியத் தலைவர் டாக்டர் ஸ்ரீ கணேஷ் மிஷேல் கூறுகையில்,”இந்த ஒத்துழைப்பு விடுமுறைக்காகவோ அல்லது வணிக நோக்கங்களுக்காகவோ மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இருதரப்பு சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் புதிய வாய்ப்புகளையும் இது உருவாக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மைபா உறுப்பு ஹோட்டல்களை தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுடன் இணைப்பதற்கான ஒரு தளம் உருவாக்கப்படும். இது பொழுதுபோக்கு மற்றும் வணிக நோக்கங்களுக்காக வரும் பயணிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் அதே வேளையில், தாய்லாந்து சுற்றுலா முகமைகளின் சேவைகளைப் பயன்படுத்தும் மலேசிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் ஊக்குவிக்கும்.”என்று அவர் தெரிவித்தார்.