Offline
Menu
16 நாட்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு: 13 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்! எம்.பி.க்களுக்கு சபாநாயகர் முக்கிய அறிவுறுத்தல்
By Administrator
Published on 07/17/2026 13:00
News

கோலாலம்பூர்:

கடந்த ஜூன் 22-ஆம் தேதி தொடங்கிய 15-ஆவது நாடாளுமன்றத்தின் 5-ஆவது கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம், 16 நாட்கள் விவாதங்களுக்குப் பிறகு இன்றுடன் ஒத்திவைக்கப்பட்டது.

இக்கூட்டத்தொடரில் மொத்தம் 13 முக்கிய மசோதாக்களும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார். மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (Suhakam) 2024-ஆம் ஆண்டறிக்கை மீதான விவாதமும் இதில் அடங்கும்.

நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்:

  • சாலைப் போக்குவரத்து (திருத்தம்) மசோதா 2026

  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்தம்) மசோதா 2026

  • சைபர் குற்றங்கள் மசோதா 2026

  • தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக (திருத்தம்) மசோதா 2026

  • சாட்சிகள் பாதுகாப்பு (திருத்தம்) மசோதா 2026

  • சமூகப் பணித் தொழில் மசோதா 2026 மற்றும் தேசிய அறக்கட்டளை நிதி மசோதா 2026.

இவற்றுடன் அமைச்சர்களின் 3 விளக்கக் கூட்டங்களும், சிறப்பு அறையில் ஓர் அமைச்சர் நடத்திய விளக்கக் கூட்டமும், நாடாளுமன்றத் தேர்வுக் குழுத் தலைவர்களின் 6 அறிக்கைகளும் இக்கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டன.

வரவிருக்கும் மாநிலத் தேர்தல் பிரசாரக் காலத்தைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஆரோக்கியத்தில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரும் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் கட்டாய மருத்துவப் பரிசோதனை (Health Screenings) செய்துகொண்டு, தங்களின் மருத்துவ ஆவணங்களை நாடாளுமன்றச் செயலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், பொதுமக்களுடனானத் தொடர்பை வலுப்படுத்தவும் நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக வரும் ஜூலை 25-ஆம் தேதி ‘நாடாளுமன்ற ஓட்டப்பந்தயம் 2026’ (Larian Cergas Parlimen 2026) நடத்தப்படவுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், மலேசிய இளைஞர் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.

கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கு முன், இதன் வெற்றிகரமானச் செயல்பாட்டிற்கு உழைத்த அனைத்து எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்குச் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

Comments