Offline
Menu

LATEST NEWS

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு; 18 சீனப் பிரஜைகள் கைது!
By Administrator
Published on 07/17/2026 12:00
News

ஈப்போவில், இணைய மோசடி மையங்களாகச் (Scam Centres) செயல்பட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 18 சீன நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 78,000 ரிங்கிட் மதிப்புள்ள மின்னணு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் குறித்துப் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஜைனல் அபிடின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திங்கட்கிழமை ஈப்போவில் உள்ள ஹில் பெர்மாய் (Hill Permai) அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தாமான் தாசேக் இந்திராவில் (Taman Tasek Indra) உள்ள லாலுவான் தாசேக் திமூர் 5 பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீடு ஆகிய இரு இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 18 நபர்களும் 26 முதல் 45 வயதுக்குட்பட்ட சீன நாட்டவர்கள் ஆவர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்: சோதனையின் போது கணினிகள், மடிக்கணினிகள் (Laptops) மற்றும் பல கைப்பேசிகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட இந்தச் சாதனங்கள் அனைத்தும் ஆன்லைன் வழி மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டவை என முதற்கட்ட விசாரணையில் நம்பப்படுகிறது. இக்கும்பலின் பின்னணி மற்றும் அவர்கள் மலேசியாவில் யாருடைய உதவியுடன் இந்த மையங்களை நடத்தினர் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments