ஒருவர் கத்தியால் குத்திக் கொலை; மற்றொருவர் கைது!
தென்கொரியாவின் வடக்கு சுங்சியோங் (North Chungcheong) மாகாணத்தில், வெளிநாட்டினரிடையே ஏற்பட்ட கடுமையான கும்பல் மோதலில் 20 வயது மதிக்கத்தக்க மலேசிய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய மற்றொரு மலேசியரைத் தென்கொரியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்கொரியா, உம்சியோங் (Eumseong) பகுதியில் இன்று (ஜூலை 26) அதிகாலை 3 மணியளவில் இந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தேகநபரின் குழுவிற்கும், பாதிக்கப்பட்ட நபரின் குழுவிற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பிலும் சுமார் 10 பேர் திரண்டு நள்ளிரவில் தெருவில் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலின் போது, 40 வயதுடைய சந்தேகநபர் கத்தியால் தாக்கியதில் 20 வயதுடைய மலேசிய இளைஞர் பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலை நடத்திய பிறகு சந்தேகநபர் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குத் தப்பி ஓடினார். எனினும், உம்சியோங் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
தற்போது கைதான மலேசியரிடம் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோதலுக்கான பின்னணி மற்றும் மோதலில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்துத் தென்கொரியப் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.